Pages

Apr 26, 2026

002-தீயாய் பரவும் கோவம்

002-1-02 - தீயாய் பரவும் கோவம்

(ஆறுவது சினம் — கதை எண்: 002-1-02)


தமிழ்ப் புத்தாண்டு காலை — நாகேந்திரன் வீட்டிலும் உற்சாகம் தாண்டவமாடியது!

காரணம்? நாகேந்திரன் மீண்டும் தேர்வில்  முதல் இடம்!


"என் பையன்தான் பள்ளியிலேயே முதல்வன்!" என்று அம்மா ஜெயம் , தொலைபேசியில் உறவினர்களுக்கு மூன்றாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்தார்.

நாகேந்திரன் கண்ணாடி முன் நின்று தலைவாரிக்கொண்டே, "அம்மா, சினிமா எத்தனை மணிக்கு?" 

முதல் rank-க்கு பரிசு — புதிதாக வந்த 'வீர விக்கிரமன்' படம். நாகேந்திரன் மனசு ஏற்கனவே திரையரங்கத்தில் இருந்தது!

அம்மா சொன்னார்கள் - நீ முதல் rank எடுத்த உடனே அப்பாதான உன்னய சினிமாக்கு கூட்டிட்டுப் போரேன்னு சொல்லி, நமக்கு முன்பதிவு பண்ணினார்.  அதனால சீக்கிரமே வந்துருவார் - நாம தயாரா கிளம்பி இருப்போம்.




🕐 நேரம் கடக்கிறது… கோவம் வருகிறது!

மூன்று மணி ஆனது. அப்பா வரவில்லை.

மூன்றரை மணி ஆனது. அப்பா வரவில்லை.

"அம்மா, அப்பா எங்கே?" என்று நாகேந்திரன் கேட்டான்.

"போன் செய்கிறேன்…" என்று அம்மா சொல்லி, அப்பாவை அழைத்தார்.

"ஜெயம் … கொஞ்சம் தாமதமாகும். அலுவலகத்தில் அவசர meeting. நீங்களே கிளம்புங்கள், நான் நேரடியாக திரையரங்கம் வருகிறேன்!"

நாகேந்திரன் முகம் சிவந்தது.

"என்ன?! அப்பா எப்பவும் இப்படித்தான் - அவரே போவோம்னு சொல்லுவார் அப்பறம் கடைசி நிமிசத்துல அவர் வரமாட்டார் — இப்போவா meeting?!"

"நாகு, புரிஞ்சுக்கோ…" என்று அம்மா சொல்ல வாய் திறந்தார்.

"வேண்டாம்! எனக்கு புரிஞ்சுக்கணும் இல்லை! எல்லாரோட அப்பாவும் சொன்ன சொன்னபடி பிள்ளைகளுக்காக வருவாங்க — என் அப்பா மட்டும் வர மாட்டாரு! எனக்கு சினிமாவே வேண்டாம்!"

அவன் குரல் உயர்ந்தது. அம்மா கண்கள் கலங்கியது.

ஒரு நிமிடம் வீட்டில் அமைதி.

அம்மா மெதுவாக சொன்னார்: "நாகு… உன் அப்பா உன்னை நேசிக்கிறார். அதனால்தான் உழைக்கிறார்."

"நேசிச்சா meeting வேண்டாம்னு சொல்லியிருப்பார்!" என்று நாகேந்திரன் அறையை விட்டு உள்ளே போய் கதவை அடித்து மூடினான்.


🎬 திரையரங்கம் — பரபரப்பான நுழைவு!

கடைசியில் அம்மாவும் நாகேந்திரனும் திரையரங்கம் சென்றனர். நாகேந்திரன் முகத்தில் கோபம் இன்னும் தங்கியிருந்தது.

உள்ளே நுழையும்போது திரையரங்க மேல்தளத்தில் சாளரத்தில் — ஒரு புறா அமர்ந்திருந்தது.

வழக்கமாக அந்த புறா அங்கே அமைதியாக தூங்கும். ஆனால் இன்று…

"கூ கூ… கூ கூ!" என்று சத்தமாக கத்தியது!

அருகில் நின்ற தேநீர் விற்பவர் ஒருவர் நெருங்க — படக்! என்று அவரை கொத்தியது!

"அய்யய்யோ!" என்று அவர் ஓடினார்.

"அம்மா பாரு! அந்த புறாக்கு  என்ன ஆச்சு?" என்று நாகேந்திரன் தன் கோபத்தை மறந்து சிரித்தான்.

அம்மாவும் சிரித்தார்: "ஆமாம்… அது யாரையோ திட்டுது!" கொஞ்சநேரத்துல சரி ஆகிறும்.  அதுக்கு எதனாலேயோ கோவம் - யாருக்குமே கோவம் வந்தால் கொஞ்ச நேரத்தில் அது குரஞ்சுரும்.

நாகேந்திரனுக்கு திடீரென்று தனது நடவடிக்கை நினைவு வந்தது — தானும் கொஞ்சம் முன்பு இப்படித்தானே கத்தினேன்!


🍿 அப்பா வருகிறார் — கோவம் கரைகிறது!

படம் ஆரம்பித்து பத்து நிமிடம் ஆனது.

திடீரென் அருகில் ஒரு நிழல்!

அப்பா வந்திருந்தார்!

மூச்சுவாங்க ஓடி வந்தவர், நாகேந்திரன் கையில் ஒரு பெரிய பாப்கார்ன் பாக்கெட் வைத்தார். கூடவே சாக்லேட்டும்!

"Meeting விட்டவுடன் ஐந்து நிமிடம் ஓட்டுநர் மணிகண்டனை தேடினேன் - ஆளக் காணாம் - உனக்காக நானே கார ஓட்டிக்கிட்டு வந்தேன். தாமதமாகிவிட்டது… Sorry நாகு!" என்று அப்பா கிசுகிசுத்தார்.

நாகேந்திரனின் கோபம் — பாப்கார்னோடு சேர்ந்து உருகியது!

அம்மா அப்பா கையை அழுத்திப் பிடித்தார். அப்பா நாகேந்திரன் தலையை கோதினார்.

திரையருங்கு திரையில் வீரன் போராடினான். ஆனால் நாகேந்திரன் மனசில் ஒரு தோல்வி உணர்வு…

"என்னை நேசிக்கிறவங்ககிட்டே கோவப்பட்டேன்… அம்மாகிட்டே கத்தினேன்…"

இடைவேளையில் அம்மா தண்ணீர் வாங்க எழுந்தார்.

நாகேந்திரன் மெதுவாக சொன்னான்: "அம்மா… sorry."

அம்மா சிரித்தார். "ஏற்கனவே மறந்துட்டேன்!  நீ இன்னுமா நினைச்சுக்கிட்டு இருக்க?”

அப்பா சிரித்தார்: "கோவம் வந்தது, போனது! அன்பிருந்தால் கோவம் கொஞ்ச நேரத்தில் ஆறிவிடும். நம்மையும் நேசிக்கிறவங்களிடம் கோவம் வந்தாலும் — அது நிரந்தரமா இருக்காது."

நாகேந்திரன் அம்மாவை பார்த்தான். அம்மா கண்ணசைத்தார்.

அன்பிருக்கும்போது சினம் ஆறும். பேரன்பு இருந்தால் சினமே வராது.


📱 திரையரங்கத்தில் ஒரு போன்!

இடைவேளை நேரம். நாகேந்திரன் கையில் போன் buzz ஆனது.

அவனுடன் படிக்கும் லட்சுமி அனுப்பியிருந்தாள்!

💬 "நாகு… நல்லதம்பிக்கு ஏதோ பிரச்சனை. இன்று காலை  கோவிலுக்கு போய் வந்தவன், ஏதோ மயிலானை அது பறக்கும், பேசும், ஓடும், நீந்தும்னு என்னென்னவோ சொல்றான். பயமா இருக்கு…"

நாகேந்திரன் புருவம் உயர்ந்தது. உடனே வெளியில் வந்து லெட்சுமிக்கு கைபேசியில் பேசினான் 

 " லட்சுமி என்னவா இருக்கும்? நான் முதல் ரேங்க் வாங்கினதால பைத்தியம் பிடிச்சுருச்சோ?" - என்று சிரித்தான் 

லட்சுமி: "சிரிக்காத நாகு! அவன் serious-ஆ சொல்றான்!"

நாகேந்திரன்: "சரி நாளைக்கு பள்ளியில பார்ப்போம். பாவம் நல்லதம்பி… அவனுக்கு மன நிலை சரி இல்லை போல!" 

“இன்னிக்கு திரையரங்குல இருந்த ஒரு புறா கூட மன நிலை சரி இல்லாம கோவத்தில் பாக்குற ஆளை  எல்லாம் கொத்துது…எல்லாம் புதுசா இருக்கு.  சரி நாளை பார்ப்போம் ”

நாகேந்திரன் போனை வைத்தான். ஆனால் மனசில் ஒரு கேள்வி நுழைந்தது…

"மயிலானை… பறக்குமா? பேசுமா? இது என்ன மயிலானை கதை?"

திரையில் வீர விக்கிரமன் போராடினான். ஆனால் நாகேந்திரன் மனசு என்னவென்றே தெரியாத மயிலானையைப்  பற்றி …அலைந்தது!


❓ கேள்வி பதில் 

போன கதைக்கான பதில்
கடைஏழு வள்ளல்கள் யார்?

பாரி, காரி, ஓரி, சேரன் செங்குட்டுவன், பேகன், ஆய், நள்ளி


  இந்தக் கதையின் கேள்வி

Alexander the Great – ஒரு கோப நொடி, நண்பன் இழப்பு

(அடுத்த கதையில் பதில் சொல்லு!)

(அலெக்சாண்டர் ஒரு விருந்தில் கோபத்தில் தனது நெருங்கிய நண்பர் Cleitus the Black-ஐ கொன்றதாக வரலாறு கூறுகிறது.

👉 முடிவு:

  • பிறகு ஆழ்ந்த வருத்தம்

  • நண்பன் திரும்ப வரவில்லை

பாடம்:
கோபத்தில் செய்த செயலை ஆயுள் முழுவதும் சுமக்க வேண்டி வரும்.)

📖 அகராதி / Dictionary

தமிழ் வார்த்தை

English Meaning

சினம்

Anger / Rage

ஆறுவது

Cooling down / Subsiding

திரையரங்கம்

Cinema Hall / Theatre

கோவம்

Anger / Irritation

இடைவேளை

Interval / Break

அமைதி

Peace / Silence

நிரந்தரம்

Permanent

பேரன்பு

Great Love / Deep Affection

விளைவு

Result / Consequence

அவசரம்

Urgency / Hurry


001-உதவியால் கிடைத்த நட்பு

உதவியால் கிடைத்த நட்பு   - விசித்திரக் கூட்டாளி

(அறம் செய விரும்பு)

டென்னசி, சட்டநூகா ஊரில்   தமிழ்ப் புத்தாண்டு - காலையிலேயே பெரிய உற்சாகம்!

“நல்லதம்பி! சீக்கிரம் வா! கோவிலுக்கு தாமதம் ஆகுது!” என்று அம்மா கூப்பிட்டார்.

“அம்மா… நான் வந்துட்டேன்… ஆனா அண்ணன் என் காலனியை ஒளிச்சு வைச்சுட்டான் …” என்று நல்லதம்பி சிரித்துக்கொண்டே ஓடினான்.

“ஹா ஹா! நீ ஓடுறது ஆமை மாதிரி இருக்கு!” என்று அண்ணன் பழனி கிண்டல் செய்தான்.

இதுதான் நல்லதம்பியின் குடும்ப புகைப்படம் 

அப்பா சிரித்துக்கொண்டு, “சரி சரி… எல்லாரும் சேர்ந்து போவோம். இன்று நல்ல நாள்!” என்றார்.

அவர்கள் அனைவரும் கோவிலுக்குப் போக காட்டு வழியாக நடந்துச்சென்றனர். அந்த காடு “நீதிவனம்” என்று அழைக்கப்பட்டது.


🌳 மர்ம சத்தம்!

திடீரென புதருக்குள் இருந்து ஒரு விசித்திரமான ஒலி. யானையின் பிளிறலும், மயிலின் அகவலும் கலந்த ஒரு வேதனை ஒலி அது! 

“அம்மா… ஏதோ சத்தம் கேக்குதே…” என்று நல்லதம்பி நின்றுவிட்டான்.

“காற்று தான் இருக்கும்…” என்றார் அப்பா.

ஆனா மீண்டும் அந்த சத்தம்…அவன் நாய் பப்பு சுற்றிலும் பார்த்தது …

“அய்யோ… காப்பாத்துங்க…”

நல்லதம்பி பயந்து, “அப்பா! இது காற்று சத்தமில்லை!” என்றான்.

அண்ணன்: “அது பேயா இருக்குமோ?”

“அட பாவி! சும்மா இரு!” என்று அம்மா அடக்கினார்.

ஆனா நல்லதம்பி மட்டும் அந்த சத்தத்தை நோக்கி மெதுவாக நடந்தான்…அவனை பப்புவும் தொடர்ந்தது.


🦚 அற்புதமான கண்டுபிடிப்பு

ஒரு பெரிய மரத்தின் கீழ்…எதையோ பார்த்து பப்பு  குலைத்தது … 

ஒரு வித்தியாசமான உயிரினம் முள்ளிலும், செடிகளுக்கிடையே சிக்கிக் கொண்டிருந்தது!

அதுக்கு மயில் மாதிரி அழகாக சிறகுகள் இருந்தது…
ஆனா யானை மாதிரி உருவம் இருந்தது …

“அய்யோ! இது என்ன?” என்று நல்லதம்பி கண்கள் பெரிதாகியது.

அது மெதுவாக பேச ஆரம்பித்தது…

“தயவு செய்து… உதவி செய்யுங்கள்…”

நல்லதம்பி அதிர்ச்சியில்: “அட! இது பேசுது!” என்று அதிசியபட்டு காப்பாற்றினான் 


🤔 மயிலானை யார்?

அந்த நேரத்தில் மரங்களின் மேலிருந்து ஒரு மெதுவான குரல்…அது அசரீரி குரல்!

“நல்லதம்பி… உன் உதவிக்கு பாராட்டுகள் - இது சாதாரண உயிரல்ல…”

“இது மயிலானை…இதற்கு அற்புத சக்திகள் உள்ளன…”

👉 மயிலானை:

  • இது பறக்கவும், நீந்தவும், ஓடவும் முடியும்

  • யாரையும் காயப்படுத்தாது

  • உதவி செய்யும்… ஆனால் கேட்டால் மட்டும்

  • மிகவும் பயந்த சுபாவம்

  • எந்த மொழியானாலும், தியானம் மூலம்  இதுக்கு 10 நிமிடத்தில் பேச, படிக்க, எழுத தெரியும் 

  • போராடத் தெரியாததால்  உலகில் அழியும் தருவாயில் இருக்கும் உயிரினம்


😟 நல்லதம்பியின் மனப் போராட்டம்

அண்ணன்: “நல்லதம்பி சீக்கிரம் வா …late ஆகுது!”

அம்மா: “என்னடா பண்ற …. சீக்கிரம் வா?”

நல்லதம்பி மயிலானையை விட்டு விட்டு அண்ணனைப் பிடிக்க நாய் பப்பு உடன் ஓடினான் -

மயிலானை முள்ளினால் காயப்பட்டதால், “ஓடாதீர்கள், இந்த இடம் இணக்கு புதிது- என்னை காப்பாற்றுங்கள் என பயந்து அழுதது…

“நான் உங்களுக்கு தீங்கு செய்ய மாட்டேன்…” என்றது மெதுவாக.

அந்த கண்ணில் இருந்த பயம் நல்லதம்பியின் மனதை உருக்கியது.

சரி வா என்றான் நல்லதம்பி - மயிலானையும் அவன் தோளில்  ஏறிக்கொண்டது. அனைவரும் கோவிலை நோக்கி நடந்தனர் 

“நான் எப்போதும் உனக்கு உதவுவேன்…
நீ கேட்டால் மட்டும்!” என்று சிரித்தது மயிலானை..

❓ இந்தக் கதைக்கான கேள்வி

👉கடைஏழு வள்ளல்கள் யார்?


Dictionary / அகராதி 


Tamil Word

English Meaning

அகராதி

Dictionary

விசித்திரம்

Strange / Weird / Unusual

உதவி

Help

அறம்

Goodness / Doing good / Kindness

ஆமை

Turtle / Tortoise

புதர்

Bush / Shrub

பேய்

Ghost

சத்தம்

Noise / Sound

வித்தியாசம்

Difference / Special change

அதிர்ச்சி

Shock / Surprise

அசரீரி

Invisible voice / Mysterious voice

பயந்த சுபாவம்

Scared nature / Easily frightened

போராட்டம்

Struggle / Fight / Protest

அழியும் தருவாயில்

About to disappear / Near extinction / Almost gone